இந்தியாவுக்கு 21 பதக்கம் * ஆசிய யூத் விளையாட்டில்
மனாமா: ஆசிய யூத் விளையாட்டில், இந்தியா ஒரே நாளில் 9 தங்கப்பதக்கம் உட்பட 21 பதக்கம் கைப்பற்றியது. பஹ்ரைனின் மனாமா நகரில், ஆசிய யூத் விளையாட்டு 3வது சீசன் நடக்கிறது. பீச் மல்யுத்தம் 'பிரீஸ்டைல்' போட்டிகள் நடந்தன. பெண்களுக்கான 55 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் அஞ்சலி, 2-1 என வியட்நாமின் தோம் தாவோவை வீழ்த்தி, தங்கப்பதக்கம் வென்றார். ஆண்களுக்கான 60 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் சுபாஷ், 2-0 என ஈரானின் அமிராலியை வென்று, தங்கம் வசப்படுத்தினார். 90 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் அர்ஜுன், 2-1 என ஈரானின் முகமதுமதியை வீழ்த்தி தங்கம் கைப்பற்றினார். மற்ற இந்திய வீரர்கள் ரவிந்தர் (80 கிலோ), சுஜாய் (70 கிலோ) பைனலில் தோற்க, வெள்ளி கிடைத்தன. சந்திரிகா அபாரம்பெண்களுக்கான குத்துச்சண்டை பைனலில் இந்தியாவின் சந்திரிகா (50 கிலோ), 5-0 என உஸ்பெகிஸ்தானின் கும்ரின்சோவை வீழ்த்தி, தங்கம் கைப்பற்றினார். இந்தியாவின் ஆஹானா (50 கிலோ), வடகொரியாவின் ஜோங் ஹயாங்கை ஒருமனதாக சாய்த்து, தங்கம் வென்றார். 46 கிலோ பிரிவில் இந்தியாவின் குஷி சந்த், 4-1 என ஜின்ஜியுவை (சீனா) வென்று, தங்கம் வசப்படுத்தினார். இதுவரை இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 17 வெண்கலம், என மொத்தம் 47 பதக்கம் வென்று, பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியது. முதலிடத்தில் சீனா (56 தங்கம், 43 வெள்ளி, 29 வெண்கலம்) நீடிக்கிறது.