| ADDED : மார் 08, 2024 09:14 PM
பிராகு: பிராகு மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா 4வது இடம் பிடித்தார்.செக் குடியரசில் பிராகு மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் தொடர் நடந்தது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் சந்தோஷ் குஜ்ராத்தி உள்ளிட்ட 10 பேர் பங்கேற்றனர். இதன் 9வது, கடைசி சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, செக்குடியரசின் டேவிட் நவரா மோதினர். இதில் பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். விறுவிறுப்பான இப்போட்டி 59வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.குகேஷ் (இந்தியா) - பர்ஹாம் (ஈரான்), விதித் சந்தோஷ் (இந்தியா) - நிகுவேன் (செக்குடியரசு) மோதிய மற்ற 9வது சுற்றுப் போட்டிகளும் 'டிரா' ஆனது.ஒன்பது சுற்றுகளின் முடிவில் உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் 6.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அடுத்த மூன்று இடங்களை தலா 5.0 புள்ளிகளுடன் செக்குடியரசின் நிகுவேன், ஈரானின் பர்ஹாம், இந்தியாவின் பிரக்ஞானந்தா தட்டிச் சென்றனர். மற்ற இந்திய வீரர்களான குகேஷ் (4.5 புள்ளி), விதித் சந்தோஷ் (3.0) முறையே 5, 10வது இடம் பிடித்தனர்.