| ADDED : ஜூலை 20, 2024 11:10 PM
இந்திய ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த். உ.பி.,யின் அலகாபாத்தில் 1905, ஆக. 29ல் பிறந்தார். ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய அணி 'ஹாட்ரிக்' தங்கம் (1928, 1932, 1936) வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். ராணுவ வீரரான இவர் 1928ல் ஆம்ஸ்டர்டாமில் (நெதர்லாந்து) நடந்த ஒலிம்பிக்கில் முதல் முறையாக பங்கேற்றார். இதில் கோல் மழை (15) பொழிந்த இவர், ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைக்க உதவினார். 'ஹாக்கி மந்திரவாதி' என்று அழைக்கப்பட்ட இவரது ஜாலம் 1932ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் போட்டியில் (12 கோல்) தொடர, மீண்டும் ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது. 1936ல் பெர்லினில் (ஜெர்மனி) நடந்த ஒலிம்பிக்கில் கேப்டன் அந்தஸ்தில் களமிறங்கினார். இம்முறை 13 கோல் அடித்து அசத்தினார்.தயான்சந்த் ஆட்டம் சர்வாதிகாரி ஹிட்லரையே கவர்ந்தது. ஜெர்மனியில் குடியேறினால் 'பீல்டு மார்ஷல்' பதவி தருவதாக கூறினார். நாட்டுப்பற்றுமிக்க இவர், அதனை ஏற்க மறுத்துவிட்டார். இவரது ஹாக்கி ஸ்டிக்கில் காந்தம் உள்ளதா என சோதித்து பார்த்த கதையும் உண்டு. 1979ல் (டிச. 3) மரணம் அடைந்தார். இவரது பிறந்த தினமான ஆக., 29 'தேசிய விளையாட்டு தினமாக' கொண்டாடப்படுகிறது. தவிர, நாட்டின் உயரிய 'கேல் ரத்னா' விருது இவரது பெயரில் வழங்கப்படுகிறது.