UPDATED : ஜூலை 19, 2024 10:45 PM | ADDED : ஜூலை 19, 2024 10:08 PM
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020ல் (ஜூலை 24 - ஆக. 9) நடக்க இருந்த 32வது ஒலிம்பிக் போட்டி, கொரோனா பரவல் காரணமாக 2021ல் (ஜூலை 23 - ஆக. 8) நடத்தப்பட்டது.ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். அபினவ் பிந்த்ராவுக்கு (2008, பீஜிங், துப்பாக்கி சுடுதல்) பின் ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற இந்தியரானார்.பாட்மின்டனில் இந்தியாவின் சிந்து வெண்கலம் கைப்பற்றினார். தொடர்ச்சியாக 2 ஒலிம்பிக்கில் பதக்கம் (2016ல் வெள்ளி) கைப்பற்றிய முதல் இந்திய வீராங்கனை, இரண்டாவது இந்தியரானார்.ஆண்களுக்கான ஹாக்கியில் இந்தியாவுக்கு வெண்கலம் வென்றது. 41 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்தது.இப்போட்டியில் ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கம் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் 48வது இடம் பிடித்தது. ஒலிம்பிக் அரங்கில் ஒரு சீசனில் அதிக பதக்கம் வென்றது இந்தியா. இதற்கு முன் லண்டன் ஒலிம்பிக்கில் (2012) 6 பதக்கம் (2 வெள்ளி, 4 வெண்கலம்) கிடைத்தது. முதல் மூன்று இடங்களை அமெரிக்கா (39 தங்கம்), சீனா (38 தங்கம்), ஜப்பான் (27 தங்கம்) தட்டிச் சென்றன.