| ADDED : மே 16, 2024 09:56 PM
புதுடில்லி: பாரிஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டன.பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஒலிம்பிக் போட்டி (ஜூலை 26 - ஆக. 11) நடக்கவுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள டேபிள் டென்னிஸ் போட்டிக்கான அணிகள் பிரிவில் பங்கேற்க இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் முதன்முறையாக தகுதி பெற்றன. இதற்கான அணிகளை, இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு அறிவித்தது. தற்போதுள்ள உலக தரவரிசையில் அடிப்படையில் வீரர், வீராங்கனைகள் தேர்வாகினர்.ஆண்கள் பிரிவில் அஜந்தா சரத் கமல் ('நம்பர்-40'), மானவ் தாக்கர் (62வது இடம்), ஹர்மீத் தேசாய் (63வது இடம்) இடம் பிடித்தனர். இதன்மூலம் சரத் கமல் 5வது முறையாக (2004, 2008, 2016, 2020, 2024) ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளார்.பெண்கள் பிரிவில் மணிகா பத்ரா ('நம்பர்-24'), ஸ்ரீஜா அகுலா (41வது இடம்), அர்ச்சனா கமத் (103வது இடம்) இடம் பிடித்தனர். மாற்று வீரராக சத்யன், மாற்று வீராங்கனையாக அய்ஹிகா முகர்ஜி தேர்வாகினர்.
இந்திய அணி
ஆண்கள்: அஜந்தா சரத் கமல், மானவ் தாக்கர், ஹர்மீத் தேசாய், மாற்று வீரர்: சத்யன்பெண்கள்: மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா, அர்ச்சனா கமத், மாற்று வீராங்கனை: அய்ஹிகா முகர்ஜி