| ADDED : ஜூலை 06, 2024 11:08 PM
மெக்சிகோவில், 19வது ஒலிம்பிக் போட்டி (1968, அக். 12-27) நடந்தது. மெக்சிகோ நகரம் கடல் மட்டத்தில் இருந்து 2,300 மீ., உயரமாக இருப்பதால் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், போல் வால்ட் போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு சிரமமாக இருக்குமென சர்ச்சைகள் கிளம்பின. ஒலிம்பிக் துவக்க விழாவில், ஜோதி ஏற்றிய முதல் பெண் என்ற பெருமையை மெக்சிகோ தடகள வீராங்கனை நார்மா என்ரிகுயிட்டா பாசிலியோ பெற்றார். செக்குடியரசை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை வீர காஸ்லவ்ஸ்கா நான்கு தங்கம், இரண்டு வெள்ளி வென்று சாதனை படைத்தார். 1968ல் செக்குடியரசு மீது ரஷ்யா படையெடுத்து ஆக்கிரமித்தது. இதனால் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க காஸ்லவ்ஸ்கா மூன்று வார காலம் தலைமறைவாக இருந்தார். தனிநபர் ஜிம்னாஸ்டிக் போட்டியில் தொடர்ந்து இரண்டு முறை தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமை பெற்றார். பதக்கப்பட்டியலில் அமெரிக்கா 45 தங்கம், 28 வெள்ளி, 34 வெண்கலம் என 107 பதக்கங்கள் வென்று முதலிடம் பிடித்தது. மெக்சிகோவுக்கு (3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம்) 15வது இடமே கிடைத்தது. ஹாக்கியில் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்தது.