UPDATED : ஏப் 08, 2024 10:57 PM | ADDED : ஏப் 08, 2024 10:35 PM
சென்னை: உலக விளையாட்டு, வணிக உச்சி மாநாட்டில், சர்வதேச ரோல் பால் போட்டிக்கு தனி அரங்கம் அமைக்கப்பட்டது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி(ஐ.ஓ.சி.,) ஆதரவில், சர்வதேச விளையாட்டு கூட்டமைப்புகளின் உலகளாவிய சங்கத்தின் 'ஸ்போர்ட் அகார்டு - 2024' உச்சி மாநாடு, இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்தது.இதில் ஐ.ஓ.சி.,யால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு கூட்டமைப்புகள், விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் பங்கேற்றன. 150க்கு மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. வரும் 2024, 2028, 2032ல் நடக்கும் ஒலிம்பிக் போட்டி குறித்து பிரபலப்படுத்தப்பட்டது. ரோல்பால் விளையாட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் இங்கு தனி அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.இதுகுறித்து சர்வதேச ரோல் பால் சங்கத்தின் இயக்குனர் ஸ்டீபன் டேவிட் கூறுகையில்,''இந்தியாவில் அறிமுகமான ரோல் பால், 55 நாடுகளில் விளையாடப்படுகிறது. ஆசிய, ஆப்ரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் ரோல்பால் போட்டிகள் நடக்கின்றன.மாநாட்டில் ரோல்பால் விளையாட்டு நிறுவனர் ராஜூ தபாடே, கூட்டமைப்பின் துணை இயக்குனர் மனோஜ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரோல் பால் குறித்து பிரபலப்படுத்தப்பட்டது. இதன் விதிமுறைகள் விளக்கப்பட்டன. உலகளவில் ரோல் பால் வளர்ச்சிக்கு இது உதவியாக இருந்தது,''என்றார்.