| ADDED : ஜூலை 18, 2024 12:07 AM
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அடுத்த எலப்பாக்கத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு, 30க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் அமைக்க, கடந்த 6 மாதத்திற்கு முன் கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்லும் போது, வாகனம் மோதி பள்ளியின் நுழைவாயில் பகுதியின், சுற்றுச்சுவர் சேதம் அடைந்தது.இதனால், பள்ளியின் நுழைவாயில் கேட்டை மூடுவதற்கு, பெரும் சிரமமாக உள்ளது. இதனால், பள்ளி வேலை நாட்களில், கால்நடைகள் மற்றும் நாய்கள் உலா வருகின்றன.மேலும், சுற்றுச்சுவர் பிடிப்பு இன்றி உள்ளதால், கீழே விழும் அபாய சூழ்நிலையும் உள்ளது. அதனால், அப்பதியில் விளையாடும் மாணவ - மாணவியர் மீது இடிந்து விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பள்ளி நுழைவாயில் பகுதியில், உடைந்துள்ள சுற்றுச்சுவரை அப்புறப்படுத்தி, புதிதாக கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பள்ளி குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.