| ADDED : ஆக 05, 2024 12:49 AM
திருப்போரூர்:திருப்போரூர் பேரூராட்சி சார்ந்து, மீன் அங்காடி செயல்படுகிறது. இந்த மீன் அங்காடியை, பேரூராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. இங்கு, மீன், கருவாடு, நண்டு, இறால் உள்ளிட்டவை விற்பனைக்காக, 20க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.இந்த அங்காடியில், சுற்றுவட்டார பகுதி மக்கள் மீன் வாங்குவதற்காக வந்து செல்கின்றனர்.மீன் விற்பனை அங்காடி கட்டடத்தின் நுழைவாயில் இரும்பு கதவு, பக்கவாட்டு ஜன்னல் தடுப்பு கம்பிகள் சேதமடைந்துள்ளன. கட்டடமும் சேதமடைந்து, பின்புற பகுதியில் புதர் மண்டிக்கிடக்கிறது.எனவே, இந்த மீன் அங்காடி கட்டடத்தை மேம்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, மீன் அங்காடி கட்டடத்தை சீரமைத்து மேம்படுத்த, பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இதற்காக, பேரூராட்சி கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.