மாமல்லபுரம் : மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வரும் பயணியர் குறைவான கட்டணத்தில் தங்குவதற்காக, தமிழக அரசின் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், கடந்த 1976ல் கடற்கரை விடுதியை, கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் அமைத்தது.அதைத்தொடர்ந்து, குழு பயணியருக்காக, 1982ல், கடற்கரை கோவில் அருகில், இளைஞர் முகாம் விடுதியும் அமைக்கப்பட்டு, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., துவக்கி வைத்தார்.இளைஞர் முகாம் விடுதி வளாகம், கடற்கரை கோவில் அருகில், 38 ஏக்கர் பரப்புடன் உள்ளது. இவ்வளாகத்தின் 3.5 ஏக்கரில் தங்கும் அறைகள், கருத்தரங்க கூடம், உணவகம், நீச்சல் குளம் ஆகியவற்றுடன் விடுதி இயங்கியது.இரண்டு விடுதிகளையும், சுற்றுலா வளர்ச்சிக்கழக நிர்வாகமே நடத்தியது. கடற்கரை விடுதி லாபத்தில் இயங்கியதால், நிர்வாகமே தொடர்ந்து நிர்வகித்து வருகிறது. இளைஞர் முகாம் விடுதி நஷ்டத்தில் இயங்கியதால், 15 ஆண்டுகள் ஒப்பந்தத்தில், தனியார் நிறுவனத்திடம், 2013ல் அளிக்கப்பட்டது.தனியார் நிறுவனம், அதன் விருப்பத்திற்கேற்ப மேம்படுத்தி, நிறுவன பெயரில் விடுதியை நடத்தியது. ஒப்பந்த காலம், 2018 மார்ச்சில் முடிவடைந்த நிலையில், நீதிமன்ற உத்தரவில், மேலும் ஆறு மாதம் கால அவகாசம் பெற்றது.அதே ஆண்டு அக்.,ல், அவகாச காலம் முடிந்து, இளைஞர் முகாம் விடுதி சுற்றுலா வளர்ச்சிக்கழக நிர்வாகத்திடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. விடுதியை தொடர்ந்து நடத்த இயலாத வகையில், தனியார் நிறுவனம் விடுதி பகுதியை சிதைத்துவிட்டே வெளியேறியதாக கூறப்படுகிறது.சுற்றுலா வளர்ச்சிக்கழக நிர்வாகமே, இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பித்து, தொடர்ந்து நடத்த முடிவெடுத்தது. ஆனால், ஆண்டுகள் பல கடந்தும் புதுப்பிக்கவில்லை.சர்வதேச சுற்றுலா இடமான இங்கு, குறுகிய இடத்தில் இயங்கும் தனியார் விடுதிகளே, திறம்பட செயல்பட்டு வருவாய் ஈட்டுகின்றன. தொல்லியல் பாரம்பரிய சின்னம், கடற்கரை என அமைந்துள்ள பிரதான இடத்தில், இவ்விடுதி முடங்கி சீரழிகிறது. பெரும்பரப்பு வளாகம், விடுதி ஆகியவை பயனின்றி, அரசிற்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.சுமார் 42 ஆண்டுகளுக்கு முன் கட்டிய விடுதி அறை கட்டடங்கள் பலமிழந்து சீரழிந்துள்ளன. புதர் சூழ்ந்து, விஷ ஜந்துக்களின் புகலிடமாக உள்ளது. பொருட்கள் திருடு போகின்றன. வெளியாட்கள், உல்லாசத்திற்கும், மது அருந்தவும், விடுதி வளாகத்திற்குள் அடைக்கலம் புகுகின்றனர்.சுற்றுலா பயணியர் அதிகரித்துள்ள சூழலில், புதிதாகவே விடுதி அமைத்தால் அவர்களுக்கு பயன்படும். தற்கால தேவைக்கேற்ப, கருத்தரங்கம், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை அனுமதித்து வருவாய் ஈட்டலாம். சுற்றுலா நிர்வாகம் பரிசீலித்து செயல்படுத்த வேண்டும் என, சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கன்சல்டிங் நிறுவன திட்ட அறிக்கை
தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர் ஒருவர் கூறியதாவது:நிர்வாகமே விடுதியை மீண்டும் நடத்த, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே முடிவெடுத்தோம். நிதி பற்றாக்குறையும் உள்ளது. எனவே, தமிழ்நாடு உட்கட்டமைப்பு வசதிகள் நிதி மேலாண்மை கழகத்திடம், 2 கோடி ரூபாய் பெற்று, விடுதியை மேம்படுத்த திட்டமிட்டோம். இம்முயற்சி பின் கைவிடப்பட்டது. தற்போது, தனியார் நிதி பங்களிப்பில், புதிதாக அமைக்க முடிவெடுத்துள்ளோம். முதல்கட்டமாக, ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்த, தனியாரை ஈடுபடுத்துவோம். பின், தேவைக்கேற்ப, மேலும் மேம்படுத்தப்படும். கன்சல்டிங் நிறுவன திட்ட அறிக்கைக்கு பின், முடிவெடுக்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.