மாமல்லபுரம்:பொதுமக்கள், தங்களின் இருப்பிடம், ஆண்டு வருவாய், ஜாதி உள்ளிட்ட வருவாய்த்துறை சான்றிதழ்களை பெற, 'ஆன்லைன்' வாயிலாக, வருவாய் துறையிடம் விண்ணப்பிக்கின்றனர்.'ஆன்லைன்' விண்ணப்ப நடைமுறையிலும், லஞ்சம் அளித்தால் மட்டுமே சான்றிதழ்கள் அளிக்கப்படுவதாக, தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது.இதுகுறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க, மாவட்டந்தோறும் சிறப்பு அலுவலரை, தமிழக அரசு நியமித்தது. செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட சமூக பாதுகாப்பு திட்ட ஆணையர் ஜான் லுாயிஸ், திருக்கழுக்குன்றம் தாலுகா பகுதிகளில், பல்வேறு சான்றிதழ்கள் கோரியவர்களை, கடந்த 26ம் தேதி சந்தித்து ஆய்வு செய்தார்.எந்த இ - சேவை மையத்தில் விண்ணப்பித்தீர்கள், நீங்களே விண்ணப்பித்தீர்களா, இ - சேவை மையத்தில் பெறப்பட்ட கட்டணம், தரகர்கள் வாயிலாக விண்ணப்பித்திருந்தால், அவரை நாடியது ஏன், அவர் வசூலித்த கட்டணம் உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்தார்.இ - சேவை மையத்தில் விண்ணப்பித்ததாக கூறிய பலர், கட்டணமாக 200 ரூபாய் அளித்ததாக தெரிவித்தனர். கட்டணத்தை பணமாகவும், அரசு நிர்ணயித்துள்ள 60 ரூபாயை விட கூடுதலாக பெறுவது தவறு என்றும், 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், அவர்களிடம் அறிவுறுத்தினார்.கூடுதல் கட்டணம் பெறும் இ - சேவை மையங்களை கண்டறிந்து, உரிமத்தை ரத்து செய்யவும் உத்தரவிட்டார்.இதே தாலுகா பகுதிகளில், பழங்குடி இருளர் சான்று கோரியுள்ள 38 பேர் மற்றும் ஆதரவற்ற விதவை சான்று கோரியுள்ள 19 பேர் ஆகியோரை, சப் - கலெக்டர் நாராயணசர்மா நேரில் சந்தித்து, ஆதார் உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்தார்.