| ADDED : ஜூலை 18, 2024 12:38 AM
விருகம்பாக்கம்,:கடந்த 2022-ம் ஆண்டு, கார்த்தி நடிப்பில் வெளியான படம் சர்தார். இப்படத்தை, பி.எஸ்.மித்ரன் இயக்கினார். இந்த படம் வரவேற்பு பெற்றதை அடுத்து, அதன் இரண்டாம் பாகம் எடுக்க படக்குழு திட்டமிட்டது.இதையடுத்து, 'பிரின்ஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் சர்தார் - 2 படத்தின் பூஜை, கடந்த 12ம் தேதி நடந்தது. தொடர்ந்து 15ம் தேதி முதல் படப்பிடிப்பு நடந்து வருகிறது.நேற்று முன்தினம் இரவு, வடபழனியில் உள்ள ஸ்டூடியோவில், சண்டை காட்சிகள் படம் பிடிக்கப்பட்டன. இதில், புதுவண்ணாரப்பேட்டை, தங்கமகள் தெருவைச் சேர்ந்த ஏழுமலை, 54, சண்டை பயிற்சியாளராக பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக, 20 அடி உயரத்தில் இருந்து ஏழுமலை கீழே தவறி விழுந்தார். இதில், மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை உயிரிழந்தார்.நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால், ஏழுமலை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். படப்பிடிப்பின்போது, பாதுகாப்பு உபகரணங்கள் அணியாததே விபத்திற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. விருகம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.