| ADDED : ஜூன் 23, 2024 03:14 AM
செய்யூர் : கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் இறந்தது, நாடு முழுதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.மேலும், 100க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தமிழகம் முழுதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அதேபோல், கடந்தாண்டு மே மாதம் செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அருகே கள்ளச்சாராயம் குடித்து எட்டு பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து, செய்யூர் பகுதியில் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிந்தது.இதன் எதிரொலியாக, கடந்தாண்டு ஓதியூர், முதலியார்குப்பம், தழுதாளிகுப்பம், நயினார்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், 300 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர். தற்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மதுராந்தகம் டி.எஸ்.பி., சிவசக்தி தலைமையிலான 30க்கும் மேற்பட்ட போலீசார், செய்யூர் பகுதியில் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.