மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சி, கொக்கிலமேடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். மீனவர். இவரது மனைவி ராஜாத்தி, 40. ஊராட்சி துணைத் தலைவி. மீனவ பகுதியில், கடந்த ஏப்., மாதம் மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டது.வேறொரு பகுதி அசுத்த கழிவுநீரை வெளியேற்றவே அதை கட்டுவதாகவும், குளம் போல் தேங்கும் கழிவுநீரால் நோய் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறி, கால்வாய் பணியை மீனவர்கள் தடுத்து, துணைத் தலைவரிடம் தகராறு செய்துள்ளனர்.ஊராட்சி திட்டப் பணியை தடுத்ததாக, மாமல்லபுரம் போலீசில், ராஜாத்தி புகார் அளித்தார். போலீசார், அவரையும், எதிர்தரப்பினரையும் விசாரித்தனர்.பணியை தடுத்தவர்கள் மீது வழக்கு பதிய நடவடிக்கை எடுத்த நிலையில், மீனவ சபையினரின் வலியுறுத்தலால், துணைத் தலைவர் புகாரை திரும்ப பெற்றதாக தெரிகிறது. இரண்டு தரப்பினரிடமும், தகராறில் ஈடுபட மாட்டோம் என, போலீசார் உறுதிமொழி கடிதமும் பெற்றனர். விசாரணை
இந்நிலையில், மீனவ சபையினர், ராஜாத்தியின் குடும்பத்தினருக்கு, ஊர் கட்டுப்பாடு விதித்தனர். மீன் பிடிக்க கூடாது, மற்றவர்கள் அவர்களிடம் தொடர்பு கொள்ளக்கூடாது, ஏலத்தில் அவருக்கு மீன் விற்கக்கூடாது என, அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.அதனால் மன உளைச்சலடைந்த ராஜாத்தி, ஏப்., 6ம் தேதி தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து, ஊர் கட்டுப்பாடு விதித்த சபையினர் ஏழு பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மீண்டும் போலீசில் புகார் அளித்து, பின் திரும்ப பெற்றார்.அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி, அவர்களுக்கு உதவிய உறவினர்களின் ஏழு குடும்பத்தினருக்கும், சபையினர் ஊர் கட்டுப்பாடு, தடை என விதித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால், அக்குடும்பத்தினர், பல வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், மீனவ சபையினர் விதித்த ஊர் கட்டுப்பாட்டால் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி, சப் - கலெக்டரிடம் ஊராட்சி துணைத்தலைவர் ராஜாத்தியின் கணவர் வெங்கடேசன் புகார் அளித்தார்.இதுகுறித்து, திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராதா, இரண்டு தரப்பினரிடம் ஏற்கனவே விசாரித்துள்ளார். ஆனால், அப்போது ஊர்க்கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை எனக்கூறி, மீனவர் சபையினர் மறுத்துள்ளனர்.இவ்விவகாரம் நீருபூத்த நெருப்பாக புகைந்ததால், நேற்று முன்தினம், சப் - கலெக்டர் நாராயணசர்மா, இரண்டு தரப்பினரிடம் விசாரணை நடத்தினார். அச்சுறுத்தல்
மீனவ சபையைச் சேர்ந்த இரண்டு பேர், ஊர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.உண்மை நிலையை கூறியவர்களின் குடும்பத்தினருக்கு எதிராக, நேற்று காலை மற்றவர்கள் திரண்டு அச்சுறுத்திஉள்ளனர்.அதன் பின், இரண்டு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால், சிலருக்கு காயம் ஏற்பட்டது.இதையறிந்து சென்ற மாமல்லபுரம் போலீசார், மேலும் மோதல் ஏற்படாமல் தடுத்து, அங்கேயே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.