மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த மணமை பகுதியில், ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப்பள்ளி இயங்குகிறது. உயிரி கணிதம், கணினி அறிவியல் மற்றும் வணிகவியல் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன.இங்கு, 137 பேர் பயிலும் நிலையில், பள்ளியின் தேவைக்கேற்ப ஆசிரியர்களை நியமிக்காமல், ஆதிதிராவிடர் நலத்துறை அலட்சியப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேல்நிலையில் கணிதம், வேதியியல், கணினி அறிவியல், உயர்நிலையில் கணிதம், தமிழ், சமூக அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு ஐந்து ஆசிரியர்களே உள்ளனர்.தமிழ், ஆங்கிலம், இயற்பியல், உயிரியல், கணினி பயன்பாடு, வணிகவியல், கணக்கியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர்களே இல்லை. பாடப்பிரிவுகள் துவக்கிய அரசு, அதற்கான பணியிடம் உருவாக்காமல் அலட்சியமாக உள்ளது.தற்போதைய தலைமையாசிரியையும், கலந்தாய்வில் வேறிடத்திற்கு மாற்றலாகிவிட்டதால், அப்பணியிடமும் காலியாக உள்ளது.பள்ளி நிலவரம் அறிந்து, இங்கு நியமிக்கப்படும் ஆசிரியர்கள், உடனே வேறு பள்ளிக்கு மாற்றலாகி வருவதாக கூறப்படுகிறது.ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக, கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக, மாணவ - மாணவியர் வேறு அரசுப் பள்ளிகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.கல்வித்தரம், பள்ளி மேம்பாடு கருதி, தேவைக்கேற்ப ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, அத்துறை செயலரிடம் நேற்று முன்தினம் மனு அளித்து முறையிட்டுள்ளதாக, முன்னாள் பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் கனகராஜ் தெரிவித்தார்.