| ADDED : ஜூன் 24, 2024 06:05 AM
படப்பை: வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில், தாம்பரம் அருகே வண்டலுார், மண்ணிவாக்கம், படப்பை, ஒரகடம் ஆகிய பகுதியில், 'மெகா சைஸ்' விளம்பர பேனர்கள் அதிக அளவில் வைக்கப்பட்டு உள்ளன.பேனர்களில் உள்ள வாசகங்கள், நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்ப்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். மேலும், பலத்த காற்று வீசும் போது, பேனர்கள் பெயர்ந்து விழுவதால், விபத்துக்களும் அடிக்கடி ஏற்படுகிறது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:வண்டலுார் — வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் விதிமுறைகளை மீறி, சாலையோர கட்டடங்கள் மீதும், மெகா சைஸ் பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன.கடந்த ஆண்டு வீசிய பலத்த காற்றில் படப்பை, ஒரகடம், கூடுவாஞ்சேரி ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் முறிந்து விழுந்து, மின் கம்பிகள் சேதமாகின. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.பேனர்களால் வாகன ஓட்டிகள் கவனம் சிதறி, இந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்த மெகா சைஸ் பேனர்களை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.