| ADDED : ஜூன் 29, 2024 10:07 PM
கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அருகே போக்குவரத்து சிக்னல் உள்ளது. இந்த சிக்னலில், சென்னை தாம்பரத்தில் இருந்து வரும் வாகனங்கள் நின்று, இடதுபுறமாக திரும்பி நெடுங்குன்றம், கேளம்பாக்கம், திருப்போரூர் செல்கின்றன.மேலும், வலதுபுறமாக திரும்பி மண்ணிவாக்கம், படப்பைக்கும், நேராக கிளாம்பாக்கம் பேருந்து முனையம் மற்றும் செங்கல்பட்டு நோக்கியும் வாகனங்கள் செல்கின்றன.அதேபோல, செங்கல்பட்டில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள். வண்டலுார் சிக்னலில் நின்று, வலதுபுறமாக திரும்பி கிளாம்பாக்கம் பேருந்து முனையம், வண்டலுார் உயிரியல் பூங்கா, திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் செல்கின்றன.கடந்த சில நாட்களாக இங்கு பொருத்தப்பட்டுள்ள சிக்னல், பழுது காரணமாக இயங்கவில்லை. இதனால், இச்சாலையில் வாகனங்கள் நீண்ட துாரம் அணிவகுத்து நிற்கின்றன.இங்கு போதிய அளவில் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்படாததால், வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, செயல்படாமல் உள்ள சிக்னலை சரிசெய்ய, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அங்கு கூடுதல் போக்குவரத்து போலீசாரை நிறுத்தி, போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.