செங்கல்பட்டு:திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம். செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில், இவரது மனைவிக்கு 2010ல் மகன் பிறந்தான்.அதன்பின், மருத்துவமனை வளாகத்தில், பிறப்பு சான்றிதழ் வழங்கும் அலுவலரிடம், பிறப்பு சான்றிதழ் பெற்றார். இதில், முகவரி தவறாக உள்ளதாகக் கூறி விண்ணப்பித்தார். இதை திருத்தம் செய்ய, தற்காலிக பணியாளர் விநாயகம், 59, என்பவர், 300 ரூபாய் லஞ்சம் கேட்டார். இதைக் கொடுக்க விரும்பாதவர், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, ரசாயனம்தடவிய 300 ரூபாயை, பன்னீர்செல்வத்திடம் கொடுத்து அனுப்பினர். விநாயகத்திடம் பணத்தை கொடுக்கும்போது, காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெயஸ்ரீ முன்னிலையில் நடந்தது.விநாயகத்திற்கு ஓராண்டு சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி ஜெயஸ்ரீ, நேற்று தீர்ப்பளித்தார்.தண்டனை பெற்றவர், தற்போது டி.என்.பி.எஸ்சி., குரூப் - 4 தேர்வில் தேர்ச்சி பெற்று, மதுராந்தகம் சார்பு நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.