பழவேற்காடு: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில், 15 கடலோர மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள், பைபர் படகுகளில், மீன்பிடித்து வருகின்றனர்.பழவேற்காடு கடற்கரை அருகே பைபர் படகுகள் மீன் பிடிக்கும் இடங்களில், விசைப்படகுகள் வரக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. விசைப்படகுகள், கடற்கரையில் இருந்து 12 'நாட்டிக்கல்' மைல் தொலைவிற்கு அப்பால் மீன் பிடிக்க வேண்டும் எனவும், தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தக் கூடாது எனவும் கட்டுப்பாடுகள் உள்ளன.சில நாட்களாக, வெளி மாவட்டங்களைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள், பழவேற்காடு கடற்கரை பகுதியில் மீன் பிடிப்பதால், பழவேற்காடு பகுதி மீனவர்கள் வருவாய் இழப்பிற்கு ஆளாகினர். இதனால், விசைப்படகு மீனவர்களை சிறைபிடிக்கப் போவதாக, பழவேற்காடு மீனவர்கள் அறிவித்தனர்.இந்நிலையில், பழவேற்காடு பகுதியில் மீன்பிடித்த விசைப்படகை, அப்பகுதி மீனவர்கள், 25க்கும் மேற்பட்ட படகுகளில் சென்று சிறைபிடித்தனர்.விசைப்படகில் மீன்பிடித்தது, மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் பகுதி மீனவர்கள் என்பது தெரிந்தது. விசைப்படகில் இருந்த 34 பேரையும், பழவேற்காடு கொண்டு வந்தனர். இதனால், பழவேற்காடில் பதற்றம் ஏற்பட்டது.தகவலறிந்த பொன்னேரி தாசில்தார் மதிவாணன், செங்குன்றம் உதவி ஆணையர் ராஜா ராபர்ட், மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்த் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து, இரு தரப்பு மீனவர்களிடமும் பேச்சு நடத்தினர்.தொடர்ந்து, பூம்புகார் மீனவர்கள் 34 பேரும், மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். நேற்று மாலை வரை, இரு தரப்பு மீனவர்களுடன், அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகு, பழவேற்காடு கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.