மதுராந்தகம்:தமிழகத்தில் ஒன்பது மாவட்ட உள்ளாட்சி தலைவர்களின் பதவிக் காலத்தை குறைக்கக் கூடாது என, செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.நேற்று, செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக, ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக, தமிழ்நாடு உள்ளாட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் முனியாண்டி, மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.மாவட்ட கூட்டமைப்பின் தலைவர் சுரேஷ் தலைமையில், ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இக்கூட்டத்தில், தமிழகம் முழுதும் உள்ளாட்சி தலைவர்கள் தேர்தலை, ஒரே கட்டத்தில், ஒரே தேர்தலாக நடத்தப்படுமாயின், நீதிமன்றத்தில் வழக்கு தொடர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களின் தலைவர்களின் பதவிக்காலம், 2026 வரை உள்ளது.இதை கலைத்துவிட்டு, தேர்தலை தமிழக அரசு நடத்தக்கூடாது. தலைவர்களின் பதவிக்காலத்தை, ஐந்து ஆண்டு காலம் வரை நீட்டிக்கப்பட வேண்டும்.இது குறித்து, கூட்டமைப்பு சார்பாக முதலமைச்சர், கவர்னரிடம் மனு அளிக்கப்படும் உள்ளிட்ட ஆறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.