திருப்போரூர்:சென்னை புறநகர் பகுதி யான திருப்போரூரில், சார் - பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு, ஓ.எம்.ஆர்., மற்றும் ஈ.சி.ஆர்., சாலைகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்கள், இந்த சார் - பதிவு அலுவலகத்தின் கீழ் வருகின்றன. இங்கு, ஒரு ஆண்டுக்கு 30,000த்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன.ஓ.எம்.ஆர்., மற்றும் ஈ.சி.ஆர்., சாலை போன்ற இடங்களில், ஐ.டி., நிறுவனங்கள், பன்னாட்டுத் தொழில் சார்ந்த நிறுவனங்கள் அதிகளவில் இருப்பதால், இந்தப் பகுதிகளில் உள்ள நிலங்களின் மதிப்பு அதிகம்.பத்திரம் பதிவு செய்ய, இந்த சார் - பதிவாளர் அலுவலகம் வருவோர் பெரும் பணக்காரர்களாக இருப்பர். இதனால், திருப்போரூர் சார் - பதிவாளர் அலுவலகம், கோடிக்கணக்கில் பணம் புரளும் இடமாக இருக்கிறது.இந்நிலையில், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, திருப்போரூர் சார் - பதிவாளர் அலுவலகத்தை இடம் மாற்றம் செய்ய, அப்போதைய கலெக்டர் ராகுல்நாத், பதிவுத்துறைக்கு பரிந்துரை செய்தார்.இதற்காக, மாவட்ட நிர்வாகம் சார்பில், தையூர் ஊராட்சியில் ஒரு ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. நேற்று, மேற்கண்ட இடத்தை பதிவுத்துறை தலைவர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.இடத்திற்கான ஆவணங்கள், வரைபடங்களை பார்வையிட்டு விபரங்களை கேட்டறிந்தார். மேலும், இடத்தை உரிய துறையிடமிருந்து வகைமாற்றம் செய்து பெறுதல், பதிவுத்துறையின் பெயரில் மாற்றம் செய்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.அப்போது, செங்கல்பட்டு மண்டல பதிவுத்துறை துணைத்தலைவர் ராஜ்குமார், செங்கல்பட்டு மாவட்ட பதிவாளர் அறிவழகன், திருப்போரூர் சார் - பதிவாளர் கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.