கும்மிடிப்பூண்டி,: கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும், கைரளி யோகா வித்யா பீடம் சார்பில், 18ம் ஆண்டு தென்னிந்திய அளவிலான யோகாசன போட்டிகள், நேற்று முன்தினம் நடந்தன.இதில், தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த, 1,300 பேர் பங்கேற்றனர்.போட்டிகளை, கும்மிடிப்பூண்டி போலீஸ் டி.எஸ்.பி., கிரியாசக்தி துவக்கி வைத்தார். வயது அடிப்படையில் 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடத்தப்பட்டன.இதில், பெண்களுக்கான போட்டியில், காரைக்கால் காமராஜர் அரசினர் நடுநிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவி என்.லலிதாம்பிகை, 13, சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இவர், ஸ்ரீ சண்முகா யோகாஸ்ரமம் பயிற்சி மைய மாணவி.ஆண்கள் பிரிவில், ஆவடியில் உள்ள தனியார் பள்ளி பிளஸ் 1 மாணவர் எஸ்.நவநீத கணபதி, 16, சாம்பியன் பட்டம் வென்றார். இவர், மஹரிஷி பதஞ்சலி யோகா மைய மாணவர். இருவருக்கும் சாம்பியன் கோப்பை, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.