துரைப்பாக்கம், : சென்னையின் முக்கிய ஆறுவழி சாலையாக, ஓ.எம்.ஆர்., உள்ளது. இந்த சாலையின் மைய பகுதியில், 20 கி.மீ., துாரத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடக்கிறது.இதற்காக, நான்கு வழியாக மாற்றி, அணுகு சாலையையும் சேர்த்து போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. சாலையின் இரண்டு பகுதியிலும், 3 அடி அகலம் வீதம் மழைநீர் வடிகால் உள்ளது.பெரும்பாலான வணிக நிறுவனங்கள், கழிவுநீரை இந்த வடிகாலில் விடுகின்றன. இந்த வடிகாலில், ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு உள்ளது.மேலும், அணுகு சாலையை பயன்படுத்தும் கனரக வாகனங்கள் பாரம் தாங்காமல், வடிகால் மற்றும் வடிகால் மூடி சேதமடைகிறது. இதன் வழியாக கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது.குறிப்பாக, துரைப்பாக்கம் பகுதியில், அதிகளவு கழிவுநீர் வெளியேறுவதால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.கழிவுநீர் தேங்கியிருப்பதால் வாகனங்களின் வேகம் குறைத்து இயக்கும்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஓ.எம்.ஆர்., பராமரிப்பு, சாலை மேம்பாட்டு நிறுவனம் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தற்போது, மெட்ரோ நிர்வாகம் பராமரிக்கிறது. கழிவுநீர் பிரச்னைக்கு, இரண்டு துறைகளும் கண்டுகொள்வதில்லை.இதனால், அடைப்பு அதிகரித்து கழிவுநீர் வெளியேறும் சமயத்தில் மட்டும், போக்குவரத்து போலீசார் அதை சரி செய்து, வாகனங்கள் சீராக செல்ல வழிவகை செய்கின்றனர்.இது குறித்து, போக்குவரத்து போலீசார் கூறியதாவது:துரைப்பாக்கம் பஞ்சாயத்து சாலையில் இருந்து வரும் கழிவுநீர், ஓ.எம்.ஆர்., வடிகாலில் விழுகிறது.வடிகால் அடைப்பால், கழிவுநீர் பிரதான சாலையில் தேங்கி, வாகன நெரிசலுக்கு காரணமாகிறது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமத்தை போக்க, பல நேரம் நாங்களே அடைப்பை அகற்றி கழிவுநீர் வெளியேறாமல் நடவடிக்கை எடுக்கிறோம்.நிரந்தர தீர்வு, சாலை மேம்பாட்டு நிறுவனம், மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் உள்ளது. சாலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.