கல்பாக்கம்:கல்பாக்கத்தில் உள்ள பழங்கால பாரம்பரிய கட்டடத்தை, பழமை மாறாமல் பராமரித்து பாதுகாக்க, அணுசக்தி துறை நடவடிக்கை எடுக்குமாறு, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அணுசக்தி துறையின் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், சென்னை அணுமின் நிலையம், பாபா அணு ஆராய்ச்சி மையம், பாவினி அணுமின் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள், கல்பாக்கத்தில் இயங்குகின்றன.இங்கு பணியாற்றும் அறிவியலாளர்கள் மற்றும் ஊழியர்கள், கல்பாக்கம், அணுபுரம் ஆகிய நகரிய பகுதிகளில் வசிக்கின்றனர்.மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சி வசிப்பிட பகுதி கையகப்படுத்தப்பட்டு, அணுசக்தி துறையிடம் ஒப்படைத்து, தொழில் வளாகம் உருவாக்கப்பட்டது.அதேபோல், புதுப்பட்டினம் ஊராட்சியில் வசித்த ஜமீன்தார், அங்குள்ள வசிப்பிடம் மற்றும் விவசாய பகுதிகளை கையகப்படுத்தி, அதில் தான் கல்பாக்கம் நகரியம் உருவாக்கப்பட்டது. இங்குள்ள பகுதியில் அடுக்குமாடி மற்றும் சாதாரண வீடுகள் உள்ளன.இப்பகுதியில், நுாற்றாண்டிற்கு முந்தைய கால நினைவாக, ஜமீன்தார் வாழ்ந்த பாரம்பரிய வீடு தற்போதும் உள்ளது. அணுசக்தி ஊழியர்களின் விளையாட்டு, கலாசார அமைப்பான 'நெஸ்கோ' அதன் அலுவலகமாக, பழங்கால கட்டடத்தை நீண்டகாலம் பயன்படுத்தியது.நாளடைவில், அலுவலகம் வேறிடம் மாறியதால், பராமரிப்பு இன்றி பல ஆண்டுகளாக சீரழிந்து வருகிறது.அணுசக்தி துறை, சுற்றுப்புற அரசு பள்ளிகளுக்கு வகுப்பறை கட்டடம் உள்ளிட்டவற்றிற்கு நிதியுதவி அளித்து வரும் அணுசக்தி துறை, இங்குள்ள பழங்கால பாரம்பரிய கட்டடத்தை பாதுகாக்காமல், தொடர்ந்து அலட்சியப்படுத்துகிறது.தற்கால தலைமுறையினர், பழமை கட்டடத்தை கண்டு வியக்கின்றனர். முற்கால பாரம்பரிய கட்டடத்தின் முக்கியத்துவம் கருதி, பழமை மாறாமல் சீரமைத்து பாதுகாக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.