மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட கடப்பேரி வெண்காட்டீஸ்வரர் கோவில் அருகே, மதுராந்தகம் தீயணைப்பு - மீட்பு பணிகள் நிலையம் அமைந்துள்ளது. இது, தனியார் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வந்தது.பின், 1982ல், வெண்காட்டீஸ்வரர் கோவில் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, மதுராந்தகம் வர்த்தக சங்கத்தாரால், தனியாக கட்டடம் கட்டுவதற்கான பணி ஆரம்பிக்கப்பட்டது.பின், 1985ல் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, அன்று முதல் மதுராந்தகம் தீயணைப்பு -மற்றும் மீட்பு பணிகள் நிலையம் செயல்பட்டு வருகிறது.தற்போது, 20 பணியாளர்களுடன், ஒரு தீயணைப்பு வண்டி மற்றும் ஒரு குயிக் ரெஸ்பான்சிபில் வண்டி உள்ளது.மதுராந்தகம் நகர் பகுதிக்கு வெளிப்பகுதியில் அசம்பாவிதம் ஏற்பட்டால், வெண்காட்டீஸ்வரர் கோவில் தெரு, போலீஸ் ஸ்டேஷன் தெரு உள்ளிட்ட பகுதிகளை கடந்து, தீயணைப்பு வாகனத்தை, மதுராந்தகம் நகர் பகுதியை தாண்டி வெளியே எடுத்துச் செல்வதற்கு காலதாமதம் ஆகிறது.மதுராந்தகம் நகரின் உள் பகுதியில், தொழிற்சாலைகள் மற்றும் குடிசை வீடுகள் இல்லை. ஆனால், நகருக்கு வெளியே சிலாவட்டம், பாக்கம், வேடந்தாங்கல், புக்கத்துறை, படாளம், கக்கிலப்பேட்டை மேலவலம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன.இத்தொழிற்சாலைகளில் அசம்பாவிதம் ஏற்பட்டால், தீயணைப்பு வாகனத்தை சம்பந்தப்பட்ட பகுதிக்கு உடனே எடுத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது.வெண்காட்டீஸ்வரர் கோவில் பகுதியில் திருவிழா காலங்கள் மற்றும் பண்டிகை காலங்களில், இருசக்கர வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்படுகின்றன.அதேபோல், பஜனை கோவில் தெரு பகுதியில், குடியிருப்பு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்டவை, தெரு பகுதியை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், தீயணைப்பு வாகனத்தை எடுத்துச் செல்வதில் பெரும் சிரமமாக உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து, தீயணைப்பு நிலையத்தை, தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள பகுதியில் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.