| ADDED : டிச 28, 2025 06:10 AM
கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே, சுற்றுலா வேன் மீது லாரி மோதியதில், 19 பேர் காயமடைந்தனர். தஞ்சாவூர் மாவட்டம், களிவண்ணன்பேட்டையைச் சேர்ந்தவர் யேசுதாஸ், 50. இவர் நேற்று முன்தினம், தஞ்சாவூரில் இருந்து தன் குடும்பத்தைச் சேர்ந்த 18 பேருடன், தனக்குச் சொந்தமான சொகுசு வேனில், சென்னைக்கு சுற்றுலா வந்துள்ளார். நேற்று காலை 6:00 மணியளவில், கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையில் வரும் போது, முன்னால் சென்ற வாகனம் மீது மோதாமல் இருக்க, யேசுதாஸ் வேனின் வேகத்தை குறைத்துள்ளார். அப்போது, சவுக்கு மரங்களை ஏற்றிக் கொண்டு பின்னால் வந்த லாரி, இவர்களது வேன் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் சொகுசு வேன் நிலை தடுமாறி, சாலை மையத்தடுப்பு சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. வேனை ஓட்டிவந்த யேசுதாஸ் உட்பட 19 பேரும், காயத்துடன் அலறி துடித்தனர். உடனே, அங்கிருந்தோர் அவர்களை மீட்டு, பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். இந்த விபத்தால் நேற்று காலை, அப்பகுதியில் சிறிது நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.