திருக்கச்சூரில் பட்டா கேட்டு 30 ஆண்டு கால போராட்டம்
மறைமலை நகர்; மறைமலை நகர் நகராட்சி, 19வது வார்டு, திருக்கச்சூர் அம்பேத்கர் நகர் பகுதியில், 81 குடும்பங்களுக்கு, கடந்த 1995ல், 2.5 சென்ட் நிலம் ஆதிதிராவிடர் நலத்துறை வாயிலாக, வீட்டு மனைகளாக பிரித்து வழங்கப்பட்டது.இதில், அந்த மக்கள் வீடு கட்டி, 30 ஆண்டுகளாக வசித்து வரும் நிலையில், இதுவரை வருவாய்த் துறை அடங்கல்களில் ஏற்றப்படவில்லை.மேலும், இப்பகுதிவாசிகள் சென்று வர முறையாக வழி இல்லாததால், தனியார் நிலத்தில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:திருக்கச்சூர் கிராமத்தில், சர்வே எண்: 380ல், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், வீட்டு மனைகளாக பிரித்து வழங்கப்பட்டது. அதற்கு பட்டா கேட்டு, 30 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.செங்கல்பட்டு வட்டாட்சியர், கலெக்டர் உள்ளிட்ட பலரிடமும், உரிய ஆவணங்களுடன் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.கடந்த 11ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் செங்கல்பட்டு வந்த போது, எங்களுக்கும் பட்டா கிடைக்கும் என, எதிர்பார்த்தோம்.ஆனால், கிடைக்கவில்லை. பட்டா இல்லாததால், மின் இணைப்பு, தொழில் துவங்க வங்கி கடன் மற்றும் அரசு நலத்திட்டங்களை பெறுவதில் சிக்கல் உள்ளது.இது குறித்து வருவாய் துறை அதிகாரிகளிடம் கேட்கும் போது, ஆவணங்கள் கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.பட்டா வழங்குதல் தொடர்பாக ஆணை பிறப்பித்தவுடன், பட்டா வழங்கப்படும் என, கூறி வருகின்றனர். ஓட்டு கேட்டு வருவோர், அதிகாரத்திற்கு வந்ததும் பட்டா மற்றும் பாதை வசதி ஏற்படுத்தி தருகிறோம் என, கூறுகின்றனர்.வெற்றி பெற்ற பின், இந்த பிரச்னை குறித்து, எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. எனவே, தமிழக அரசு இந்த பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.