| ADDED : பிப் 06, 2024 05:45 AM
சென்னை, : சென்னை பன்னாட்டு விமான நிலையம் புறப்பாடு பகுதி அருகே அவசர தேவைக்காக பிரபல மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலை 4:30 மணி அளவில், ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர் கணேசன், 30 என்பவர் கழிப்பறைக்கு சென்று, திரும்பி வந்த போது, ஆம்புலன்ஸ் மாயமானது. சென்னை விமான நிலைய போலீசில் புகார் செய்தார்.கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், வாலிபர் ஒருவர் ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டி சென்றது தெரியவந்தது. ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஜி.பி.எஸ்., கருவி இருந்ததால், அது செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்துார் அருகே, சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர்.உடனே மேல்மருவத்துார் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேல்மருவத்துார் அடுத்து உள்ள தொழுப்பேடு சுங்க சாவடியில், ஆம்புலன்ஸ் வாகனத்தை போலீசார் மடக்கிப் பிடித்து, விமான நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விசாரணையில், சென்னையை அடுத்த செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மாதவன், 35, என்பவர் ஆம்புலன்ஸ் வாகனத்தை கடத்தியது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.