| ADDED : பிப் 12, 2024 12:37 AM
சென்னை, நந்தம்பாக்கத்தில், 'டிட்கோ' எனும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில், 56 ஏக்கர் பரப்பளவில், 'பின்டெக் சிட்டி' அமைக்கப்படுகிறது.அதற்கான கட்டுமானப் பணிக்கு தேவையான சிமென்ட் கலவை தயாரிப்பதற்கான கலவைக் கூடம், நந்தம்பாக்கம், வேம்புலியம்மன் கோவில் தெருவை ஒட்டியுள்ள காலி மனையில் உள்ளது.இந்த கூடத்தில் இரவு, பகலாக சிமென்ட் கலவை தயாரித்து, லாரிகளில் ஏற்றி, கட்டுமான இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால் துாசு பறந்து, சுற்று வட்டார பகுதிகளில் வசிப்போர் மிகவும் தவிக்கினறனர்.இதுகுறித்து, குடியிருப்புவாசிகள் கூறியதாவது:கடந்த ஆண்டு டிச., மாதம், இந்த சிமென்ட் கலவைக் கூடம் அமைக்கும்போதே எதிர்ப்பு தெரிவித்தோம். எனினும், கலவைக்கூடம் அமைக்கப்பட்டது.ஆலை திறந்தவெளியில் செயல்படுவதால், சிமென்ட் கலவை துாசி பறந்து, உணவுகள் உள்ளிட்ட அனைத்தின் மீதும் படர்ந்து வருகிறது.வீடுகளில் உள்ள கிணறுகளின் நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது. இங்கு வசிக்கும் சிறார்கள், முதியோருக்கு, அடிக்கடி சுவாசக்கோளாறு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதாகிறது.எங்கள் பிரச்னைக்கு தீர்வு காண, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகார் அளித்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.-- நமது நிருபர்- -