உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அர்ஜுனன் தபசு 3டி லேசர் ஒளி,- ஒலி காட்சி திட்டம்...முடக்கம்!:முன்னேற்றம் இல்லாததால் சுற்றுலா பயணியர் அதிருப்தி

அர்ஜுனன் தபசு 3டி லேசர் ஒளி,- ஒலி காட்சி திட்டம்...முடக்கம்!:முன்னேற்றம் இல்லாததால் சுற்றுலா பயணியர் அதிருப்தி

மாமல்லபுரம்:செயல்படுத்த திட்டமிட்ட அர்ஜுனன் தபசு சிற்ப '3டி லேசர்' ஒளி -- ஒலி காட்சித் திட்டம், எந்த முன்னேற்றமோ, தொடர் செயல்பாடோ இல்லாமல் முடங்கி உள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால பாரம்பரிய சிற்பங்களில், அர்ஜுனன் தபசு குறிப்பிடத்தக்கது.இச்சிற்பம், நீளமான பாறைக் குன்றின் விளிம்பு பகுதியில் நிலத்தின் கீழ், மேலாக, புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டு உள்ளது. சிவபெருமான், தேவர்கள், இமயமலை, கங்கை நதி, வனவிலங்குகள் உள்ளிட்ட சிற்பங்கள் உள்ளன. சுற்றுலா பயணியரை மிகவும் கவர்ந்து வரும் இவற்றை, அனைவரும் கண்டு ரசிக்கின்றனர்.இதை இரவில்,'3டி லேசர்' ஒளி - ஒலி காட்சி வடிவிலும் பயணியர் ரசிக்க, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், கடந்த 2023ல் முடிவெடுத்தது.இத்திட்டத்தை செயல்படுத்த, ஐந்து கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது.அர்ஜுனன் தபசு சிற்பத்தின் முன்புறம், இத்திட்டத்திற்காக நிலம் தேவைப்பட்டது. இதனால், ஹிந்து சமய அறநிலையத் துறையின், ஸ்தலசயன பெருமாள் கோவிலுக்குச் சொந்தமாக உள்ள, 7,736 சதுர அடி இடத்தை, 25,000 ரூபாய் மாத வாடகை அடிப்படையில் கோவில் நிர்வாகத்திடமிருந்து, அதே ஆண்டு ஒப்பந்தம் செய்து, சுற்றுலா நிர்வாகம் பெற்றது.அப்பகுதியில் பார்வையாளர் வளாகம், '3டி லேசர்' ஒளி - ஒலி கட்டமைப்புகள், பிரகாச ஒளி விளக்குகள் ஆகியவற்றை ஏற்படுத்த, சுற்றுலா வளர்ச்சி நிர்வாகம் முயன்றது.அப்போது, பாரம்பரிய சிற்ப பகுதி என்பதால், அதன் அருகில் ஏற்படுத்தப்படும் புதிய கட்டமைப்புகளுக்கு, தொல்லியல் துறையினரிடம் முறையான அனுமதி பெறுமாறு, சுற்றுலா நிர்வாகத்திடம் கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியது.ஆனால் சுற்றுலா நிர்வாகமோ, அனுமதி பெறாமல் கட்டமைப்புகள் ஏற்படுத்த முயன்றது.சுற்றுலா நிர்வாகத்தினர், தொல்லியல் துறை மண்டல இயக்குனருடன், கடந்தாண்டு திட்டம் குறித்து ஆலோசித்த போது, கட்டமைப்புகள் குறித்து முறையான திட்டத்துடன் அணுகினால் மட்டுமே அனுமதி குறித்து பரிசீலிப்பதாக, தொல்லியல் மண்டல இயக்குனர் தெரிவித்தார்.ஆனால், கடந்தாண்டு மே மாதம், இந்த திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்தினர், சிற்பத்தை மறைக்கும் வகையில், ஏழு அடி உயர இரும்பு தடுப்புகளை அமைத்தனர்.சிற்பம், கோவில் ஆகிய பாரம்பரிய சூழலுக்கு, இந்த புதிய கட்டமைப்பு இடையூறாக இருப்பதாக, பக்தர்களும் சுற்றுலா பயணியரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, கோவில் நிர்வாகம் அறிவுறுத்தி, புதிய கட்டமைப்புகள் அகற்றப்பட்டன. தற்போது அங்கு, வெறும் கம்பிகள் மட்டும் உள்ளன.சுற்றுலா, ஹிந்து சமய அறநிலைய ஆகிய துறைகளுக்கு ஒரே ஆணையர் என்பதால், இத்திட்டத்திற்கு அறநிலையத் துறை கோவில் இடத்தை கட்டாயப்படுத்தி பெறப்பட்டதாக தெரிகிறது.சிற்ப பகுதியில் உருவாக்கும் கட்டமைப்புகளை நிறுத்துமாறு கோவில் நிர்வாகத்திடம், தொல்லியல் துறை நிர்வாகம் ஏற்கனவே பணி நிறுத்து உத்தரவு அளித்துள்ளது. அதுமட்டுமின்றி, உரிய அனுமதி பெறாமல், கட்டுப்பாட்டை மீறி கோவில் நிர்வாகம் செயல்படுவதாக, தொல்லியல் துறை சார்பில், மாமல்லபுரம் போலீசில் கடந்த ஆண்டு புகாரும் அளிக்கப்பட்டது.இச்சூழலில், சுற்றுலாத்துறை புதிய அமைச்சராக பொறுப்பேற்ற ராஜேந்திரன், கடந்த நவ., 21ம் தேதி, இங்கு ஆய்வு செய்தார். அப்போது சுற்றுலா இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ், லேசர் ஒளி - ஒலி காட்சியை சிற்பத்தின் முன்புற பிரதான சாலையில் நடத்துவது, பொது இடத்தில் அதற்காக நுழைவுக் கட்டணம் வசூலிப்பது ஆகியவற்றில் உள்ள குளறுபடி, தொல்லியல் துறை அனுமதி ஆகியவை குறித்து, சுற்றுலா அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.திட்டத்தின் செயல்பாட்டு நடைமுறை குறித்து, தன்னுடன் ஆலோசிக்கவும் அறிவுறுத்தினார்.ஆனால், மூன்று மாதங்கள் கடந்தும், இந்த திட்டத்தில் முன்னேற்றமோ அல்லது அதன் செயல்பாடு குறித்தோ எத்தகைய அறிவிப்பும் இல்லாமல், திட்டம் கிடப்பில் உள்ளது. இதனால், சர்ச்சை ஏற்பட்டுள்ளது.அர்ஜுனன் தபசு சிற்ப '3டி லேசர்' ஒளி -- ஒலி காட்சித் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும், அதற்கான அனுமதி குறித்தும், தொல்லியல் துறையிடம் தொடர்ந்து ஆலோசிக்கப்படுகிறது. அத்துறையினர் அனுமதி அளித்ததும், கட்டமைப்பு பணிகளை விரைந்து முடித்து, லேசர் ஒளி - ஒலி காட்சி நிச்சயம் நடத்தப்படும்.- சுற்றுலா வளர்ச்சி அலுவலர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி