மருத்துவமனைகளை பராமரிக்க மத்திய குழுவினர் அட்வைஸ்
சதுரங்கப்பட்டினம்: சதுரங்கப்பட்டினம் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தை முறையாக பராமரிக்க வேண்டுமென, மத்திய குழுவினர் அறிவுறுத்தினர். கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினத்தில், மேம்படுத்தப்பட்ட வட்டார ஆரம்ப சுகாதார மையம் இயங்குகிறது. மத்திய சுகாதாரம், குடும்ப நல மண்டல இயக்குநர் நிர்மல்ஜோ தலைமையிலான குழுவினர், மாவட்ட சுகாதார அலுவலர் பானுமதியுடன், நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். இம்மையத்தில் சிகிச்சை பெறும் புறநோயாளிகள் எண்ணிக்கை, முக்கிய மருந்துகள் உள்ளிட்டவற்றின் இருப்பு ஆகியவற்றை பரிசோதித்து, மகப்பேறு பிரிவை பார்வையிட்டனர். அங்கு சிகிச்சை பெற வந்தவர்களிடம், மையத்தின் செயல்பாடு குறித்து கேட்டறிந்தனர். சுகாதார மைய வளாக பகுதி முறையான பராமரிப்பின்றி இருப்பதையும், புதிய கழிப்பறை பயன்படுத்தப்படாமல் உள்ளதையும் கண்டு அதிருப்தியடைந்த அவர்கள், துாய்மையாக பராமரிக்க அறிவுறுத்தினர். மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் பகுதி அரசு மருத்துவமனைகளிலும், வெவ்வேறு குழுவாக ஆய்வு செய்தனர்.