| ADDED : ஜன 01, 2026 05:07 AM
மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே வெள்ளப்புத்துார் ஊராட்சியில், நேற்று சத்தீஸ்கர் மாநில ஊரக வளர்ச்சித் துறை துணை ஆணையாளர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் வெள்ளப்புத்துார் ஊராட்சி உள்ளது. மறைமலை நகரில் உள்ள மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பயிற்சி மையத்திற்கு வந்த சத்தீஸ்கர் மாநில ஊரக வளர்ச்சி துறை துணை ஆணையாளர் மற்றும் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்ட தொழில்நுட்ப உதவியாளர்கள் குழுவினரை, வெள்ளைப்புத்துார் ஊராட்சி துணை தலைவர் விஜயகுமார் வரவேற்றார். வெள்ளப்புத்துார் ஊராட்சி வளர்ச்சி பணிகள், 100 நாள் திட்டப் பணிகள், நீர் மேலாண்மை பணிகள், நாற்றங்கால் பண்ணை, திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை, நெகிழிகள் அரைக்கும் மையம், இருளர் பட்டியலின மக்களுக்கு கட்டப்பட்டு வரும் ஜன்மன் வீடு உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வெள்ளைப்புத்துார் ஊராட்சி தலைவர் வரதன் மற்றும் ஊராட்சி செயலர், துாய்மை பணியாளர்கள் உடன் இருந்தனர்.