| ADDED : ஜன 29, 2024 04:11 AM
சென்னை : தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான மகளிர் கிரிக்கெட் போட்டி, தமிழகத்தில் பல பகுதிகளில் நடந்து வருகிறது.இதில், திருவள்ளூரில் நடந்த போட்டியில், திருவள்ளூர் அணியுடன், ராணிப்பேட்டை அணி பலப்பரீட்சை நடத்தியது. முதலில் களமிறங்கிய திருவள்ளூர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 30 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக யஷ்வந்திகா 34 ரன் எடுத்தார்.அடுத்து களமிறங்கிய ராணிப்பேட்டை அணி வீராங்கனையர், எவ்வித பதற்றமும் இன்றி, பந்துகளை விரட்டி அடித்து ரன் குவித்தனர். இதனால், அந்த அணி 25 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து, 145 ரன் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரீனாஸ் ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் குவித்தார்.துாத்துக்குடியில் நடந்த மற்றொரு போட்டியில், கோவை அணியை 39 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் அணி வீழ்த்தியது. கிருஷ்ணகிரியில் நடந்த போட்டியில், செங்கல்பட்டு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கிருஷ்ணகிரி அணியை வென்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.