| ADDED : நவ 21, 2025 03:09 AM
அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் அருகே கடமலைப்புத்துார் பகுதியில், அலோபதி மருத்துவம் பார்த்த போலி மருத்துவரை, போலீசார் தேடி வருகின்றனர். அச்சிறுபாக்கம் அருகே கடமலைப்புத்துார் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராஜன், 43. இவர், அச்சிறுபாக்கம் அடுத்த கடமலைப்புத்துாரில், 'கிளினிக்' நடத்தி வந்துள்ளார். இவர், ஆங்கில மருத்துவம் படிக்காமல், தனியாக கிளினிக் நடத்தி வருவதாக, செங்கல்பட்டு மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் மலர் விழிக்கு புகார் சென்றுள்ளது. இந்த புகார் மனுவின் மீது ஆய்வு செய்ய, இணை இயக்குநர் மலர்விழி மற்றும் குழுவினர், கடமலைப்புத்துாரில் உள்ள கிளினிக்கில் ஆய்வு செய்ய சென்றுள்ளனர். இந்த விஷயம் தெரிந்து, ரங்கராஜன் கிளினிக்கில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து மலர்விழி, அச்சிறுபாக்கம் காவல் நிலையத்தில், ரங்கராஜன் மீது புகார் அளித்துள்ளார். புகாரின்படி, அச்சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, போலி மருத்துவர் ரங்கராஜனை தேடி வருகின்றனர்.