தாம்பரம் : தாம்பரம் மாநகர காவல் எல்லையில், கஞ்சா விற்பனை நடப்பதாக வந்த தகவலையடுத்து, மதுவிலக்கு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது, தாம்பரம் அருகே ஊரப்பாக்கத்தில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த வாலிபர்கள் இருவரை பிடித்து விசாரித்தனர். முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததால், காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து தாம்பரம் சுற்று வட்டார பகுதியில் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.அவர்களிடம் இருந்து 52 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு 20 லட்சம் ரூபாய். இது தொடர்பாக, ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த ரவிகுமார், 27, முரளி, 26, ஆகியோரை கைது செய்தனர். போலீசார், கூடுவாஞ்சேரி மதுவிலக்கு பிரிவில் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். கேரள வாலிபர் கைது
அம்பத்துார் மதுவிலக்கு போலீசார், நேற்று காலை 8:30 மணி அளவில், பட்டரவாக்கம் ரயில் நிலையம் அருகே, கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிக்கிய சந்தேக நபரை பிடித்து, அவர் வைத்திருந்த, 'பார்சலை' சோதனையிட்டனர். இதில் 10 கிலோ கஞ்சா சிக்கியது. விசாரணையில், கேரள மாநிலம், பத்தணம்திட்டா பகுதியைச் சேர்ந்த பிபின் மோன் பிஜூ, 21, என்பதும், ஒடிசாவில் இருந்து கஞ்சா வாங்கி வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.