அரசு சிற்றுண்டி விடுதிக்கு ரூ.ஐந்து லட்சம் வருவாய்
மாமல்லபுரம், இந்திய நாட்டிய விழாக்கால அரசு சிற்றுண்டி விடுதி, ஐந்து லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டியது.தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கடற்கரை விடுதி, மாமல்லபுரத்தில் இயங்குகிறது. அதன் நிர்வாகம், இந்திய நாட்டிய விழாவின் போது, விழாக்கால சிற்றுண்டி விடுதியை, பல ஆண்டுகளாக நடத்துகிறது. அதன்படி, இந்தாண்டு கடற்கரை கோவில் அருகில், கடந்த டிச., 22 - ஜன., 20ல் இந்திய நாட்டிய விழா நடந்தது. தினசரி மாலை, பாரம்பரிய நாட்டியங்கள், கிராமிய கலைகள் நிகழ்த்தப்பட்டன.இதையடுத்து விடுதி நிர்வாகம், அதன் கூடுதல் வருவாய் கருதி, சிற்றுண்டி விடுதி நடத்தியது. தோசை உள்ளிட்ட சிற்றுண்டி உணவுகள், சமோசா உள்ளிட்ட தின்பண்டங்கள், தேனீர் உள்ளிட்டவற்றை விற்பனை செய்தது.பள்ளிகள் அரையாண்டு விடுமுறை காரணமாக, பயணியர் திரண்ட சூழலில், விற்பனையும் களைகட்டியது. இந்த வகையில் மொத்தம், ஐந்து லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்ததாக, சிற்றுண்டி விடுதி நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.