திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த மானாமதி ஊராட்சியில், 5,000த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, அரசு மேல்நிலைப் பள்ளி, காவல் நிலையம், கூட்டுறவு வங்கி உள்ளிட்டவை உள்ளன.இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மாணவர்கள் வருகின்றனர்.இங்கிருந்து அடையாறு, தாம்பரம், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு ஆகிய முக்கிய பகுதிகளுக்கு, அரசு போக்குவரத்து கழக பேருந்துகளும், மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளும் இயங்குகின்றன.இவை, மக்களுக்கும் பெரிதும் பயன்படுகின்றன. இந்த பேருந்துகள் வந்து பயணியரை ஏற்றிச் செல்ல பேருந்து நிலையம் இல்லை. அங்குள்ள கூட்டுறவு வங்கி சார்ந்த ஒரு பகுதி இடத்தில் நிறுத்தி ஏற்றிச் சென்றன. தற்போது, வங்கி நிர்வாகம் அந்த இடத்தில் சுற்றுச்சுவர் அமைத்து வருகிறது.இதனால், பேருந்துகள் வங்கி அருகே சாலையில் நின்று, பயணியரை ஏற்றிச் செல்கின்றன. இதனால், காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.பயணிகள் நிற்கவும், பேருந்து நிறுத்தவும் இடமில்லை. மழை, வெயில் காலங்களில், அனைவரும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை.எனவே, மாவட்ட நிர்வாகம் நேரடி கவனம் செலுத்தி, இப்பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மானாமதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.