மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தினர், நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தின், செங்கல்பட்டு மாவட்டம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில், மாவட்ட தலைவர் வசுமதி தலைமையில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், செயலர் பாரதி, பொருளாளர் லோகநாயகி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் முகமது உசேன் உள்ளிட்ட பலர் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், தலைமை தொழில்நுட்ப அலுவலர் பதவி உருவாக்கத்தை இறுதி செய்து, அரசாணை வெளியிட வேண்டும். 2011ம் ஆண்டு துவக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லுாரிகளில், 440 நிலை - 2 பணியிடங்களை, காலமுறை ஊதியத்திற்கு மாற்ற வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்பவும், பணி நியமனம் பெற்ற 1,577 பேரை ஜி.பி.எப்.,ல் இணைக்க வேண்டும். உள்ளிட்ட, 20 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.