கொள்முதல் நிலையத்தில் வீணாகும் நெல் மூட்டைகள்
பவுஞ்சூர்: நீலமங்கலம் ஊராட்சியில் முறையான பாதுகாப்பு இல்லாமல் நேரடி கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்த நெல்மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகி உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் பருவமழையால், செய்யூர் அடுத்த நீலமங்கலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பாதுகாப்பு இல்லாமல் திறந்த வெளியில் வைக்கப்பட்டு இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நணைந்து நாசமாகி வருகின்றன. நெல் மூட்டைகள் அடுக்கி மேலே தார்ப்பாய் போட்டு மூடப்பட்ட இருந்தாலும், பூமியில் மழைநீர் பெருக்கெடுத்து மூட்டைகள் நணைந்து நெல் மூட்டைகளின் ஈரப்பதத்தால் நெல் முளைப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் பிடித்து வைத்திருக்கும் நெல் மூட்டைகளை விரைவாக லாரிகளில் ஏற்றி சென்று சேமிப்பு கிடங்கில் பத்திரப்படுத்த வேண்டும் என, விவசாயிகளிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.