உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  தாழம்பூர் நான்கு முனை சந்திப்பில் ரவுண்டானா, சிக்னல் அமைக்க கோரிக்கை

 தாழம்பூர் நான்கு முனை சந்திப்பில் ரவுண்டானா, சிக்னல் அமைக்க கோரிக்கை

திருப்போரூர்: திருப்போரூர் அருகே தாழம்பூர் சாலை நான்கு முனை சந்திப்பில் ரவுண்டானா, சிக்னல், வேகத்தடை இல்லாததால், விபத்து அபாயம் நிலவுகிறது. சென்னையை ஒட்டிய புறநகர் பகுதிகளான தாழம்பூர், நாவலுார், சிறுசேரி, பொன்மார் ஆகியவை, அருகருகே அமைந்துள்ளன. இங்கு ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள், 'ஷாப்பிங் மால்'கள், கல்வி, தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன. சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகமானோர், புதிதாக இந்த பகுதிகளில் குடியேறி வருகின்றனர். இதனால், இப்பகுதியில் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது. ஓ.எம்.ஆர்., எனும் பழைய மாமல்லபுரம் சாலையைப் போன்று, உள்சாலையாக உள்ள தாழம்பூர் சாலை சந்திப்பிலும், போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தாழம்பூர் ஊராட்சியில் கிழக்கு நாவலுார், மேற்கு பொன்மார், வடக்கு மேடவாக்கம், தெற்கு சிறுசேரி செல்லும் நான்கு முனை சாலை சந்திப்பு உள்ளது. இந்த நான்கு முனை சந்திப்பை ஒட்டி பல் மருத்துவக்கல்லுாரி, பொறியியல் கல்லுாரி, ஊராட்சி மன்ற அலுவலகம், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவை அமைந்துள்ளன. இதனால் காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதியாக, இந்த பகுதி மாறுகிறது. வாகனங்கள் தாறுமாறாக செல்வதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. பாதசாரிகள் சாலையைக் கடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, இந்த சந்திப்பில் ரவுண்டானா, போக்குவரத்து சிக்னல், வேகத்தடை, எச்சரிப்பு பலகை உள்ளிட்டவை அமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ