சென்னை: திருவள்ளூர் யு - 12 கிரிக்கெட் போட்டியில், செங்கல்பட்டு மாவட்ட அணி, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதலிடத்தை கைப்பற்றியது. திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், யு - 12 கிரிக்கெட் போட்டி, ஆவடியை அடுத்த பட்டாபிராமில் நேற்று நிறைவடைந்தது. போட்டியில், செங்கல்பட்டு, திருவள்ளூர் உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணிகள் மோதின. நேற்று முன்தினம் நடந்த முதல் அரையிறுதியில், திருவள்ளூர் அணி, 40 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து, 155 ரன்களை அடித்தது. அடுத்து விளையாடிய ராணிபேட்டை அணி, 35 ஓவர்களில், 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியடைந்தது. மற்றொரு அரையிறுதியில், செங்கல்பட்டு அணி, 126 ரன்கள் வித்தியாசத்தில், காஞ்சிபுரம் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. நேற்று காலை நடந்த இறுதிப்போட்டியில், 'டாஸ்' வென்ற திருவள்ளூர் அணி, முதலில் பேட்டிங் செய்து, செங்கல்பட்டு அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சுக்கு முன், 37.2 ஓவர்களில், 87 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. எளிய இலக்குடன் களமிறங்கிய செங்கல்பட்டு அணி, பொறுமையுடனும் நிதானத்துடனும் விளையாடி, 22.1 ஓவர்களில், 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 88 ரன்களை எட்டி, எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, கோப்பையை கைப்பற்றியது.