விவசாயிகளுக்கு தனி அடையாள எண் பதிவு மதுராந்தகம் தாலுகாவில் பணி மும்முரம்
மதுராந்தகம்:விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்குவதற்காக தகவல் சேகரிக்கும் பணி கடந்த 11 ல் துவங்கி, மும்முரமாக நடந்து வருகிறது.ஆதார் எண் போல் விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.விவசாயிகள் வேளாண் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் போது அவர்கள் கொடுக்கும் தகவல்களை அடிக்கடி சரி பார்க்க வேண்டிய நிலை உள்ளது.இதில் நேர விரயும், பிரச்சனைகள் ஏற்படுகிறது.இவை ஏற்படாமல் இருக்க விவசாயிகளின் நலன் கருதி அடையாளம் எண் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. மதுராந்தகம் தாலுகாவில் இதற்கான பணி கடந்த 11 ல் துவங்கியுள்ளது.அனைத்து ஊராட்சி அலுவலகம், இ- சேவை மையங்களில் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு அடுக்கு உருவாக்கும் பணி வேளாண்மை துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.விவசாயிகள் தங்களது ஆதார் எண், சுய விபரங்கள், பட்டா, சிட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்,ரேஷன் கார்டு போன்ற தகவல்களை நேரில் சென்று தெரிவிக்கலாம்.அந்தந்த கிராம பகுதிகளில் வேளாண்துறை அதிகாரிகள், தோட்டக்கலை பணியாளர்கள் பதிவு செய்து வருகின்றனர். முகாம் காலை 10:00 முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறும்.அண்டவாக்கம் பகுதியில் நடந்த விவசாய அடையாள அட்டை எண் பதிவு செய்யும் முகாமில் வேளாண் இணை இயக்குநர் செங்கல்பட்டு பிரேம் சாந்தி மற்றும் மதுராந்தகம் வேளாண் உதவி இயக்குநர் நெடுஞ்செழியன் பங்கேற்று, விவசாய அட்டை எண் பதிவு செய்தனர்.