சோழிங்கநல்லுார்:சட்டசபையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானிய கோரிக்கை விவாதம் நடந்தது.இதில், சோழிங்கநல்லுார் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் பேசியதாவது:தொகுதியில், குடிநீர் திட்ட பணியில் விடுபட்ட 835 தெருக்கள் மற்றும் கழிவுநீர் திட்டத்தில் விடுபட்ட 773 தெருக்களில், பணி மேற்கொள்ள மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதற்கு நிதி ஒதுக்க வேண்டும்.தொகுதியில், நீதிமன்றம், பத்திரப்பதிவு, உணவு பொருள் வழங்கல்துறை உதவி ஆணையர் அலுவலகம், வட்டார போக்குவரத்து, தாசில்தார், கூட்டுறவு வங்கி ஆகிய அலுவலகங்கள் வாடகை கட்டடத்தில் செயல்படுகின்றன.இவற்றுக்கு சொந்த கட்டடம் கட்ட, சர்வே எண்: 574ல் மீட்கப்பட்ட 62 ஏக்கர் இடத்தில், 10 ஏக்கர் ஒதுக்க வேண்டும். தொகுதிக்கு, தினமும் 8 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. பற்றாக்குறையை போக்க, 5 கோடி லிட்டர் குடிநீர் கூடுதலாக வழங்க வேண்டும்.இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., உள்ளிட்ட பகுதியில், கிராம நந்தம், தரிசு, மேய்க்கால் மற்றும் அரசு இடங்களில் நீண்ட நாள் குடியிருப்போருக்கு, பட்டா வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.