கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேடு கிராமத்தில், ஹிந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் எட்டியம்மன் கோவில் உள்ளது. இங்கு, 2002ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேக விழாவின் போது, இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, கோவிலுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. அதன்பின், 2011ம் ஆண்டு கோவில் திறக்கப்பட்டது.கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, இரு பிரிவினரையும் அழைத்து, அரசு தரப்பில் பேச்சு நடத்தப்பட்டது. கூட்டத்தின் முடிவில், கும்பாபிஷேக விழாவன்று, காலை நேரத்தில் ஒரு பிரிவினரும், பிற்பகல் நேரத்தில் மறு பிரிவினரும் வழிபாடு செய்து கொள்ளலாம் என, முடிவு எடுக்கப்பட்டது.கடந்த, 9ம் தேதி எட்டியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. காலையில் ஒரு பிரிவினர் வழிபாடு செய்த நிலையில், மற்றொரு பிரிவினர் போலீஸ் பாதுகாப்புடன் வழிபாடு செய்ய சென்றனர்.அப்போது, 'கோவிலுக்கு செல்லும் பாதை பட்டா நிலத்தில் இருப்பதால், அனுமதிக்க மாட்டோம்' என வழிமறிக்கப்பட்டனர். இதனால், இரு பிரிவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட பிரிவினர், சாலை மறியலில் ஈடுபட்டனர். அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, அரசு தரப்பில் கோவிலுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.அனுமதி மறுக்கப்பட்ட தரப்பினர் அளித்த புகாரின்படி, கோவிலில் வழிபாடு செய்யவிடாமல் தடுத்ததாக, வழுதலம்பேடு ஊராட்சி தலைவர் மணிமேகலை உட்பட ஏழு பேர் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.