உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காஞ்சியில் அரசு நிலத்தில் கோவில்? கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு

காஞ்சியில் அரசு நிலத்தில் கோவில்? கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை, அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட இரண்டு கோவில்களை அகற்றக் கோரிய மனு மீது எட்டு வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்படி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகுமார் என்பவர் தாக்கல் செய்த மனு:சின்னகாஞ்சிபுரத்தில் அருள்மிகு ரேணுகா பரமேஸ்வரி விநாயகர் கோவில், அருள்மிகு துர்க்கை அம்மன் கோவில் உள்ளன. கோட்றாம்பாளையம், முல்லாபாளையம் ஆகிய இரு தெருக்களும் பிரதானம். இந்த தெருக்களை ஒட்டியே, தற்போது வசித்து வரும் நாகலாத்து தெரு உள்ளது.கோட்றாம்பாளையம், முல்லாபாளையம் ஆகிய இரண்டு தெருக்களை ஆக்கிரமித்து, இரண்டு கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பு செய்த இடம் அரசுக்கு சொந்தமானது. அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட இந்த கோவில்களால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, அப்பகுதியில் அமைந்துள்ள பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். அவசர தேவைக்காக, ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது.பொது சாலையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட இக்கோவில்களால், அவ்வழியே இறந்தவர்களை எடுத்து செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, இரு கோவில்களை அகற்றக்கோரி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டருக்கு, கடந்தாண்டு செப்டம்பரில் மனு அளித்துள்ளேன்.இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.வீரராகவன் ஆஜரானார். அப்போது, மனுதாரரின் மனுவை பரிசீலித்து எட்டு வாரங்களில் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ