உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரசு நிலத்தை ஆக்கிரமித்து மடிப்பாக்கத்தில் அடாவடி

அரசு நிலத்தை ஆக்கிரமித்து மடிப்பாக்கத்தில் அடாவடி

மடிப்பாக்கம், மடிப்பாக்கத்தில், ஆக்கிரமிக்கப்பட்ட அரசு இடத்தை காலி செய்யும்படி, வட்டாட்சியர் இருமுறை நேரில் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்பாளர்களின் அடாவடி தொடர்கிறது. சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலம், வார்டு 188க்கு உட்பட்டது மடிப்பாக்கம். இதன் விரிவு பகுதியாக -ராம் நகர், பாகீரதி நகர் உள்ளன. இங்கு 4,000 பேர் வசிக்கின்றனர். பாகீரதி நகரின் ஜெ.கே.சாலைக்கும், வேளச்சேரி மடிப்பாக்கம் பஜார் சாலைக்கும் இடையே, அரசுக்கு சொந்தமான 3,224 சதுர அடி காலி இடத்தை, இரு நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இந்த காலி இடம், பள்ளிக்கரணை சர்வே எண் 663/5சி கீழ் வருகிறது.ஆக்கிரமிக்கப்பட்ட 3224 சதுர அடியில், சற்குணம் என்பவர் வசம் 1,144 சதுர அடியும், முருகா ஹார்டுவேர்ஸ் கடை நிர்வாகம் வசம் 2,080 சதுர அடியும் உள்ளன. இதன் மதிப்பு 3 கோடி ரூபாய்.ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்தை மீட்டு, பஜார் சாலையும், ஜெ.கே., சாலையும் இணையும்படி, இணைப்பு சாலை அமைக்கப்பட்டால், இப்பகுதியினர் இரு நிமிடங்களில் பஜார் சாலைக்கு செல்ல முடியும். தற்போது 1 கி.மீ., சுற்றிக் பஜார் சாலைக்கு செல்கின்றனர்.சமூக ஆர்வலர் மாதவன், 59, கூறியதாவது:இரு நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 3,224 சதுர அடி இடத்தை மீட்டு, அதில் இணைப்பு சாலை, ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது நுாலகம் அமைக்க வேண்டும் என, அதிகாரிகளிடம் பல முறை புகார் அளிக்கப்பட்டது.ஆக்கிரமிப்பு தொடர்பான செய்தி 'தினமலர்' நாளிதழில் வெளியானதன் எதிரொலியாக, அவ்விடத்தில் எவ்வித கட்டுமான பணிகளையும் தொடரக்கூடாது என, ஆக்கிரமிப்பாளர்கள் இருவருக்கும் 2020ல் மாவட்ட வருவாய் துறை சார்பில், பிரிவு 7ன் கீழ் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.பின், 2022 அக்டோபரில், வட்டாட்சியர் வாயிலாக, பிரிவு 6ன் கீழ், இரு ஆக்கிரமிப்பாளர்களுக்கும் தனித்தனி சுற்றறிக்கை அனுப்பி, 15 நாட்களுக்குள் இடத்தை காலி செய்ய உத்தரவிடப்பட்டது.ஆனால், அரசியல் பின்புலத்தால் ஆக்கிரமிப்பாளர்கள் இருவரும், இவற்றை அலட்சியப்படுத்தி அந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர்.கடந்த பிப்., 5ல், வருவாய்த்துறை சார்பில், நில அளவையர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வந்து, ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தின் பழைய ஆவணங்களை வைத்து ஆய்வில் ஈடுபட்டு, ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை காலி செய்ய உத்தரவிட்டனர். அதையும் ஆக்கிரமிப்பாளர்கள் கண்டுகொள்ளவில்லை.இந்நிலையில், கடந்த 23ம் தேதி, சோழிங்கநல்லுார் தாசில்தார், சர்வேயர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் மீண்டும் நேரில் வந்து, ஆய்வு செய்து, இரு ஆக்கிரமிப்பாளர்களையும் அழைத்து, உடனே ஆக்கிரமிப்பை அகற்றும்படி உத்தரவிட்டனர். ஒரு வாரம் ஆகியும் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.எனவே, சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகள் இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை