ராயபுரம், மின் கட்டண உயர்வை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் தமிழகம் முழுதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பழைய வண்ணாரப்பேட்டை, தங்கச்சாலை பேருந்து நிலையம் அருகில், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்க இருந்தது.காலை 9:30 மணியளவில் அ.தி.மு.க., நிர்வாகிகள், கட்சியினர் திரளாக கூடினர்.அப்போது அங்கு வந்த ராயபுரம் உதவி கமிஷனர் மகேந்திரன், ''இங்கு ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நீங்கள் மாற்று இடத்தில் போராட்டம் நடத்துங்கள்,'' என்றார்.உடனே கட்சி தொண்டர்கள், 'கடந்த 17ம் தேதி போராட்டத்திற்கு அனுமதி கேட்டு காவல் நிலையத்தில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அனுமதி இல்லை என்றால், உடனே மறுப்பு கடிதம் கொடுத்திருக்கலாமே; நேற்று வரை ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை' எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மேலும், 'வண்ணாரப்பேட்டை, கண்ணன் ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி தர வேண்டும் என வலியுறுத்தினர். இந்த சம்பவத்தால் ஒரு மணிநேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ் கட்டணமும் உயரும்
இது குறித்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது: தி.மு.க., ஆட்சியில், 200 நாட்களில், 500 கொலைகள் நடந்துள்ளன; சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், 50 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தி, மக்களை பாதிப்படைய செய்திருக்கிறது. சொத்து வரி, பால் கட்டணம் உயர்வு, பதிவு கட்டணம் உயர்வு, மின் கட்டணம் உயர்வு என, விரைவில் பஸ் கட்டணமும் உயரும். உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி தரப்போவதாக பேசுகின்றனர். இன்று உதயநிதி; நாளை அவரது மகன் இன்பநிதி வந்தாலும் அவரையும் துதி பாடுவர். இயக்குனர் ரஞ்சித் தி.மு.க.,விற்கு ஜால்ரா தட்டினால், ரஞ்சித் வாழ்க என்பர். 'இல்லையென்றால் இயக்குனர் ரஞ்சித் யார் என தெரியாது' என்பர். ஆஸ்கார் விருதுக்கு தி.மு.க.,வினர் தகுதி வாய்ந்தவர்கள்.இவ்வாறு அவர் கூறினார்.ஆர்ப்பாட்டத்தில், அமைப்பு செயலர் ராயபுரம் மனோ உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்களும் பங்கேற்றனர்.அதேபோல, சென்னை, தங்கச்சாலை மணிக்கூண்டு அருகே பாலகங்கா தலைமையிலும், தண்டையார்பேட்டையில் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.