உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துரைப்பாக்கம், சோழிங்கநல்லுாரில் மீண்டும் போக்குவரத்து மாற்றம்

துரைப்பாக்கம், சோழிங்கநல்லுாரில் மீண்டும் போக்குவரத்து மாற்றம்

சோழிங்கநல்லுார், ஓ.எம்.ஆரில் இந்திரா நகர் முதல் சிறுசேரி வரை, 20 கி.மீ., துாரத்தில் மெட்ரோ ரயில் பணி நடக்கிறது. இதற்காக சில மாதங்களுக்கு முன், டைடல்பார்க், எஸ்.ஆர்.பி.டூல்ஸ், பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார், குமரன்நகர் ஆகிய சந்திப்புகளில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.இந்நிலையில், துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லுார் சந்திப்பில் ரவுண்டானா மேம்பாலத்துடன், ரயில் நிலையங்கள் கட்டப்பட உள்ளன. இதனால், பணி செய்ய இதர சந்திப்புகளை விட, இங்கு அதிக இடம் தேவைப்படுகிறது.தற்போதைய போக்குவரத்தில் இருந்து, கூடுதலாக சில மாற்றங்கள் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். தற்போது, பெருங்குடியில் இருந்து ரேடியல் சாலை நோக்கி செல்லும் வாகனங்கள், துரைப்பாக்கம் சந்திப்பில் இருந்து நேராக சென்று, 400 அடி துாரத்தில், 'யு டர்ன்' செய்து செல்ல வேண்டும். இதற்கான இரண்டு நாட்களாக, சோதனை ஓட்டம் நடக்கிறது. மேடவாக்கத்தில் இருந்து சோழிங்கநல்லுார் சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள், எல்காட் வளாகம் வழியாக, 1.50 கி.மீ., துாரம் பயணித்து ஓ.எம்.ஆரில் சேரும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.எல்காட் அருகில், தாம்பரம் காவல் ஆணையரகம் உள்ளதால், அங்குள்ள வாகனங்கள் எளிதில் ஓ.எம்.ஆர்., செல்லும் வகையில், சோழிங்கநல்லுார் சந்திப்பு நோக்கி ஒரு வழிபாதை அமைக்க திட்டமிட்டுள்ளனர்.அதேபோல், இ.சி.ஆரில் இருந்து ஓ.எம்.ஆர்., நோக்கி செல்லும் வாகனங்கள், வீட்டுவசதி வாரியம் பிரதான சாலை வழியாக, 3.50 கி.மீ., துாரம் பயணித்து, குமரன்நகர் சந்திப்பு சென்று அங்கிருந்து இதர பகுதிகளுக்கு செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.இந்த போக்குவரத்து மாற்றம், இரண்டு ஆண்டுகள் நீடித்தால்தான், சோழிங்கநல்லுாரில் ரவுண்டானா மேம்பாலம் மற்றும் இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் கட்டும் பணியை விரைந்து முடிக்க முடியும் என, மெட்ரோ நிர்வாகம் கூறி உள்ளது.அதற்கு ஏற்ப போக்குவரத்தில் மாற்றம் செய்ய, போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை