| ADDED : ஜூலை 05, 2024 12:16 AM
சென்னை, சென்னையைச் சேர்ந்த சரவணன் என்பவர், பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், 'மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரை கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப் பணி நடக்கிறது. இதற்காக இச்சாலையின் மேற்கு பகுதி ஓதியூர் உப்பங்கழி ஏரி அழிக்கப்படுவதை தடுக்க உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.இம்மனுவை விசாரித்த தீர்ப்பாயம், 'ஓதியூர் உப்பங்கழி ஏரிக்கு பாதிப்பு இல்லாமல், சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்' என, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உத்தரவிட்டது.இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தீர்பபாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோரது உத்தரவு:இ.சி.ஆர்., விரிவாக்கத்திற்காக, ஓதியூர் உப்பங்கழி ஏரியில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பாலம் கட்டி வருகிறது.உப்பங்கழிக்கு கடல் நீர் வந்து செல்ல வசதியாக காப்பணை கட்டப்பட்டு, தெற்கு பகுதியில் பாலத்தின் கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. தற்போது, வடக்கு பகுதியில் கடல் நீர் வந்து செல்கிறது.தெற்கு பகுதியில் பணிகள் முடியும் முன்பே, வடக்கு பகுதியில் பாலம் கட்டும் பணிகள் நடப்பதாகவும், இதனால் நீரோட்டம் பாதிக்கப்படும் என்றும், மனுதாரர் புகார் தெரிவித்துள்ளார்.கடல் நீர் இயற்கையாக வந்து செல்வதற்கு எவ்வித தடையும் ஏற்படுத்தாமல், ஓதியூர் உப்பங்கழி ஏரிக்குள் பாலம் அமைக்கும் பணிகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொள்ள வேண்டும்.உப்பங்கழியின் எந்தப் பக்கத்தில் கட்டுமானப் பணிகள் நடந்தாலும், நீரோட்டத்திற்கு தடை இருக்கக் கூடாது. இதை ஆணையம் உறுதி செய்ய வேண்டும். அடுத்த விசாரணை ஆக., 7ல் நடக்கும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.