மாடம்பாக்கம், தாம்பரம் - வேளச்சேரி சாலையில், ராஜகீழ்பாக்கம் சிக்னலில் இருந்து பிரிந்து செல்கிறது, மாடம்பாக்கம் சாலை.இது, வண்டலுார் - கேளம்பாக்கம் சாலையை இணைப்பதால், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், டிப்பர், ஜல்லி லோடு லாரிகள், வேன், கார் என, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.தவிர, சாலையை ஒட்டியுள்ள பகுதிகள், சில ஆண்டுகளாக அசுர வளர்ச்சியடைந்து வருவதாலும், போக்குவரத்து அதிகரித்துவிட்டது.முக்கிய சாலையாக மாறியுள்ளதால், ராஜகீழ்பாக்கம் சிக்னலில் இருந்து கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் வரை, சாலை விரிவாக்கம் செய்யும் பணி, 2022ல் துவங்கி, வேகமாக நடந்து வருகிறது.மற்றொரு புறம், மழைநீர் கால்வாய் கட்டும் பணியும் நடந்து வருகிறது. இதில், மாடம்பாக்கம், சுதர்சன் நகரில், கால்வாயை நேராக கட்டாமல், 'எஸ்' வடிவில் கட்டப்பட்டுள்ளது. இப்படி கட்டினால், நீரோட்டம் சீராக இருக்காது என புகார் எழுந்துள்ளது.நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், கடைகாரர்களிடம் 'கட்டிங்' வாங்கிக் கொண்டு, பல இடங்களில் கால்வாயை வளைத்து கட்டுவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கால்வாய் கட்டும் பணியை, உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'குறிப்பிட்ட அந்த இடத்தில் யாருக்காகவும், எதற்காகவும் கால்வாயை வளைத்து கட்டவில்லை. அந்த இடம் பட்டா இடம். அதன் உரிமையாளர்கள், கால்வாய் கட்ட இடம் தருவதாக கூறினர். பின், மறுத்துவிட்டனர். அதன் காரணமாகவே, கால்வாய் வளைத்து கட்டப்பட்டுள்ளது' என்றனர்.